
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்ததிலிருந்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தொடர்ந்த வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்களும் மூன்று முன்னாள் ராஜாங்க அமைச்சர்களும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் நான்கு மனைவிகள், ஏழு பிள்ளைகள் மற்றும் 06 முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
இந்தக் கைது நடவடிக்கைகள் ஒக்டோபர் 2024 மற்றும் ஒக்டோபர் 2026 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டன எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அரச நிறுவனங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்த – தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின்னரே – ஊழலுக்கு எதிரான பயனுள்ள நடவடிக்கைகள் வேகமெடுத்தன என்றும் அவர் கூறினார்.
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மொத்தம் 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் அரசியல்வாதிகள் என்றும் சுனில் வட்டகல மேலும் தெரிவித்தார்.



