
இஸ்லாத்தை அவமதித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கூறியமையை அடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு நேற்று முன்தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தான் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, சுருக்கமான நடைமுறையின் மூலம் – வழக்கை முடித்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஞானசார தேரர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் கொம்பனித் தெருவிலுள்ள நிப்பொன் ஹோட்டலில் பௌத்த பிக்குகள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, இஸ்லாத்தை அவமதித்துப் பேசினார் என, ஞானசார தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 06 வருட சிறைத்தண்டனைக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தனது மற்றொரு குற்றத்தை ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



