தலைப்புச் செய்திகள்

நாமல் மற்றும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கு இடையிலான இ-மெயில்கள், விசாரணைகளின் போது மீட்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் தொடர்பான விசாரணையின் போது – மீட்கப்பட்ட மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நேற்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அரசுத் தரப்புக்காக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக நாமல் ராஜபக்ஷவிற்கும் ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸின் அதிகாரிகளுக்கும் இடையே மின்னஞ்சல் தொடர்புகள் இருந்ததை தடயவியல் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

“தடயவியல் விசாரணையின் போது, ​​ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல் தொடர்புகளை எங்களால் மீட்க முடிந்தது. இந்த கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக சந்தேக நபர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை அந்த மின்னஞ்சல்கள் வெளிப்படுத்துகின்றன” என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றில் வாக்குமூலங்களை வழங்கியதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந்த கொடுக்கல்-வாங்கல் தொடர்பான வெளிநாட்டு தடயவியல் கணக்காய்வு ஆவணங்களும் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களால் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், மார்ச் 23, 2013 திகதியிட்ட ஏர்பஸ் நிறுவனத்தின் மின்னஞ்சல் ஒன்றும் அடங்கும். அதில், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான – நிறுவனத்தின் தரப்பு நியாயங்களை ‘ஜனாதிபதியின் மகன்’ மூலம் அமைச்சரவையில் முன்வைப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏர்பஸ் விமான கொள்முதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிகள் குறித்த ‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின்’ (Prevention of Money Laundering Act) கீழான விசாரணையின் போதே இந்த புதிய தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

வழக்கில் மற்றொரு சந்தேக நபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவிற்குச் சொந்தமான ‘பிஸ் சொல்யூஷன்ஸ்’ (Biz Solutions) நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு வைக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அந்த நிதியில் 800,000 அமெரிக்க டொலர்கள், பின்னர் தொழிலதிபர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியது.

கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாய்க்கு இணையான தொகை பின்னர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டதாக, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலம் மற்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் நிமல் பெரேரா தெரிவித்திருந்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

நாமல் ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா; பணம் நிமல் பெரேராவிற்குச் சொந்தமான கணக்கிலேயே பெறப்பட்டது என்று வாதிட்டு, அந்தப் பணம் தொடர்பான குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், தனது கட்சிக்காரருக்கு எதிரான அரசுத் தரப்பின் வாதத்தையும் மறுத்தார்.

பணமோசடி தொடர்பான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 23-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அன்று அவரது பிணை மனு மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.