
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம், அவர் தலைமை வகித்த ‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கில் – தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிடப்பட்டது தொடர்பாக, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் ஒன்றை வாங்குவதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியை, தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே, இந்த விசாரணை நடைபெறுகிறது. அந்த ஸ்கேனர் சீன அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது என, அரச ஊடகமான ‘தினமின’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வைப்புத்தொகை தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் அப்போதைய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. ‘சிறிலிய சவிய’ அமைப்பின் மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைகளிலுள்ள கணக்குகளுக்கு, அந்த அமைப்பின் எழுத்துப்பூர்வ கோரிக்கையைத் தொடர்ந்தே பணம் மாற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
CT ஸ்கேனர் வாங்குவதற்காக அரச வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட போதிலும், அது அதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால், அப்பணம் என்னவானது என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அவர் உடல்நலக்குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதால், விசாரணை பின்னர் நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
‘சிறிலிய சவிய’ கணக்கு தொடர்பாகச் சந்தேகத்திற்குரிய பல விடயங்கள் இருப்பதாகவும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தக் கணக்கு தொடர்பாக ஷிரந்தி ராஜபக்ஷவிடம் கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி ஏற்கனவே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



