
”தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கென்று – வைத்திய பீடத்தைப் பெற வேண்டுமென்றால், நமது தரப்பில் – அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும். தலைவர் றிசாட் பதியுதீனும், தலைவர் ரஊப் ஹக்கீமும் அனுபவசாலிகள், இயலுமை உள்ளவர்கள். நீங்கள் அமைச்சராகுவற்கு ஏதாவது வழிகளைப் பாருங்கள்” என்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தெரிவித்தார்.
ரஊப் ஹக்கீமுடன் எனக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவர் அம்பாறை மாவட்டத்துக்கு, ஒரு முழு அமைச்சர் பதவியை – பெற்றுக் கொடுக்க முயற்சித்தாரா என்கிற கேள்வி உள்ளது. தனக்கு ஈடாக ஒருவர் அமைச்சராகி விடக் கூடாது என்று, தலைவர்கள் யோசிக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளில், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும், ‘AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD’ எனும் நிகழ்வு, அட்டாளைச்சேனையில் நேற்று (13) நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார்.
அகில இலங்கை மாக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான எம்.எஸ்.எம். ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுத்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.0
இந்த நிகழ்வில், பேராசிரியர் பாசில் தொடர்ந்து பேசுகையில்;
“2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், நமது சமூகம் – அமைச்சர் பதவிகளை இழந்திருக்கிறது. அதன் மூலம் சமூகத்துக்குரிய வேலைத் திட்டங்களைக் கொண்டு வரும் ஆற்றல் இழக்கப்பட்டிருக்கிறது.
றிசாட் பதியுதீனும், ரஊப் ஹக்கீமும் அமைச்சுப் பதவிகைளப் பெறும் போதுதான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கென்று ஒரு வைத்திய பீடத்தைக் கொண்டுவர முடியும்.
இலங்கையில் வைத்தியத்துறையில் 65க்கு மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு மட்டக்களப்பு பிராந்தியத்தில் 50க்கும் மேற்பட்ட பிரிவுகள் வந்துவிட்டன. சிறுநீரகம் மாற்றும் பிரிவும் வந்துவிட்டது. ஆனால், நாங்கள் எங்கே இருக்கிறோம்? அவர்களுக்குக் கிடைப்பது கிடைக்கத்தான் வேண்டும். முஸ்லிம்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்துக்கு வைத்திய பீடம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும்.
அதற்குரிய வழிகளைத் தேடுங்கள். தேசிய மக்கள் சக்தி – இப்போதுள்ளதைப் போன்று, எப்போதும் புகழோடு இருக்க மாட்டாது. உங்களுடைய தேவை அவர்களுக்கு ஏற்படும். அதற்கு சிறிது காலம் எடுக்கலாம். அந்த நேரத்தில் கவனமாக நுழைந்து கொள்ளுங்கள்.
ரஊப் ஹக்கீமுடன் எனக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவர் அம்பாறை மாவட்டத்துக்கு, ஒரு முழு அமைச்சுப் பதவியை – பெற்றுக் கொடுக்க முயற்சித்தாரா என்கிற கேள்வி உள்ளது. தலைவர்கள், தனக்கு ஈடாக ஒருவர் அமைச்சராகி விடக் கூடாது என்று யோசிக்கக் கூடாது.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் றிசாட் பதியுதீன் மறைமுகமாக செய்து வரும் பங்களிப்பு எனக்குப் பிடிக்கும். றிசாட் பதியுத்தீன் மறைமுகமாக கல்விக்கு உதவி செய்பவர் என்பதால்தான், அவரின் கட்சி சார்பில் நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு – நான் ஒத்துக் கொள்கிறேன்.
மன்னார் – கரடிக்குளத்தில் பிறந்து, புத்தளத்தில் வசிக்கும் எனது நண்பரொருவர், றிசாட் பதியுதீனுக்கு தெரிந்தவராக இருந்தார். நான் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, அந்த நண்பரும் அங்கு வந்தார். அந்த நண்பர் மலேசியாவுக்கு வருவதற்கு முன்னர் அவரை றிசாட் பதியுதீன் தேடிச் சென்று, ஓர் அன்பளிப்பை வழங்கியிருந்தார். அந்த அன்பளிப்பை மறுநாள் திறந்து பார்த்த போது, அதற்குள் 03 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்த நண்பர் மலேசிய பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் படிப்பை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்டணத்தை, றிசாட் பதியுதீன் வழங்கிய பணம் மூலமாகவே செலுத்தினார். இப்படித்தான் றிசாட் பதியுத்தீன் – கல்விக்கு மறைமுகமாக உதவி வருகிறார்” என்றார்.
இந்தந நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டனர். அதன்போது நினைவுச் சின்னம், சான்றிதழ்களுடன் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதன்போது, மாணவர்களின் பெற்றோரும் மேடையில் வைத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




