தலைப்புச் செய்திகள்

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’, விமான நிலையத்தில் வைத்து கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கொண்ட ரஞ்சி எனப்படும் ரஞ்சித் குமார இன்று (09) காலை துபாயிலிருந்து நாடு கடத்தப்படட நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கொண்ட ரஞ்சி இன்று காலை சுமார் 7.50 மணியளவில் இலங்கையை வந்தடைந்த நிலையில், அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஜனவரி 09ஆம் திகதி துபாய் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கொண்ட ரஞ்சி – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும், பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் அவர் தேடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலைச் சம்பவம் தொடர்பாகவும் அவர் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

துபாயில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட – பல இலங்கை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களில் கொண்ட ரஞ்சியும் ஒருவராவார்.

ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்ததும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.