
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், இன்று (29) சென்றிருந்தனர்.
விசாரணை தொடர்பாக ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு கோரப்பட்ட போதிலும், ரவி கருணாநாயக்க ஆஜராகாததால், அவரின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்றே – லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜராவதைத் தவிர்க்கவில்லை என்று ரவி கருணாநாயக்கவின் ஊடகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், அவரால் குறிப்பிட்ட திகதியில் ஆஜராக முடியவில்லை. எனவே, அவர் ஆஜராவதற்கு மற்றொரு திகதியை அவரின் சட்டத்தரணிகள் கோரியுள்ளதாக, ரவி கருணாநாயக்கவின் ஊடகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
வேறோரு திகதியில் – லஞ்ச, ஊழல்ஆணைக்குழுவின் முன்பாக, ரவி கருணாநாயக்க ஆஜராவார் என்று, அவரின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
ரவி கருணாநாயக்க கொழும்பில் இல்லை என்பதை அறிந்த பிறகு, ஆணைக்குழு அதிகாரிகள் அவரின் வீட்டை விட்டு வெளியேறினர்.



