தலைப்புச் செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில், சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

– பாறூக் ஷிஹான் –

ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர ஊழியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இன்று (17) முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுக்கான அத்தியாவசிய வைத்திய சேவைகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய சிற்றூழியர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 09 முஸ்லிம் பெண் ஊழியர்கள், தமது சீருடையுடன் தலையை மறைத்து ஸ்கார்ஃப் அணிந்தும், கால்களை மறைக்கும்படி ஜீன்ஸ் அணிந்தும் ஆடையுடுத்துவதற்கு, அங்குள்ள நிர்வாகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.