
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாகப் பணியாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு – ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து, இன்றைய தினம் (14) வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கடிதங்களை வழங்கியுள்ளார்.
‘சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது’ எனும் தலைப்பில் வழங்கப்பட்ட அந்தக் கடிதத்தில், சுற்று நிருபத்தினை பின்பற்றாமல் ஆடையணிந்து கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில்;
‘மேற்படி பெயருடைய தாங்கள் 2026.08.06 ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக சுகாதார அமைச்சினால் எமது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டிருந்தீர்கள்.
தாங்கள் கடமையை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே – சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட கற்று திருபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு தங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
தாங்கள் சுற்றுநிருபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
தாங்கள் தகுதிகாண் காலப்பகுதிக்கு உட்பட்ட ஊழியர்கள் என்பதனை நினைவூட்டுவதுடன், உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றிக்கையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.
தவறும் பட்சத்தில், தாங்கள் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதனை அறியத் தருகின்றேன்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



