தலைப்புச் செய்திகள்

தன்னை வசைபாடி, இழிவுபடுத்திய சக உறுப்பினருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மகளிர் விவகார அமைச்சருக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சரீனா கடிதம்

றாவூர் நகர சபை அமர்வின் போது மு.காங்கிரஸ் உறுப்பினர் நாசர் என்பவர் – தன்னை வசைபாடி, இழிவுபடுத்தி, டஜிட்டல் தளங்களில் தனது நற்பெயருக்கு கேடு விளைவித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜுக்கு, ஏராவூர் நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்.எம். சரீனா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

ஏறாவூர் நகர சபையின் உத்தியோகபூர்வ சபை அமர்வின் போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான பாலின அடிப்படையிலான வாய்வழி வசைபாடுதல், பொதுமக்களுக்கு முன்பாக இழிவுபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி துண்புறுத்தல் பிரசாரம் தொடர்பான சம்பவத்தை குறிப்பிட்ட அமைச்சருக்கு நேற்று (22) உறுப்பினர் சரீனா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஏறாவூர் நகர சபையின் உத்தியோகபூர்வ அமர்வு இம்மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற போது, சபை விவாதங்களில் நான் தீவிரமாகப் பங்குபற்றிக் கொண்டிருந்த வேளையில், ஆளும் கட்சி உறுப்பினர் எம். நாசர் (அஸ்வத்) என்பவர் எவ்விதத் தூண்டுதலுமின்றி எனக்கு எதிராக மிகவும் அவதூறான மற்றும் இழிவான வாய்வழித் தாக்குதலைத் தொடுத்தார்.

அவர் மிகவும் கேவலமான, துஷ்பிரயோகமான மற்றும் பெண் வெறுப்புணர்வைத் தூண்டும் மொழியைப் பயன்படுத்தினார்.

இதில் “வாயை மூடு”, “வெளியே போ” மற்றும் ” விபச்சாரி” போன்ற வார்த்தைகளும் அடங்கும்.

இவை எத்தகைய நாகரிகமான ஆளுகை நிறுவனத்திலும்கூட அல்லது பொது வெளியில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

பெண் பொதுப் பிரதிநிதியின் மாண்பைக் குலைப்பதற்கும், அவமானப்படுத்துவதற்கும், அச்சுறுக்குவதற்கும் இந்தத் திட்டமிட்ட செயல் – நோக்கம் கொண்டிருந்தது. ​

மேலும், இந்த துஷ்பிரயோக நடத்தையைத் தொடர்ந்து, தீய நோக்கிலான டிஜிட்டல் தாக்குதல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

சபை நடவடிக்கைகளின் முழுமையான தொகுக்கப்படாத காணொளி மறைக்கப்பட்டு, எனது கடுமையான ஆத்திரமூட்டலுக்கு எதிரான உணர்ச்சிகரமான எதிர்வினையை மட்டும் காட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தப்பட்ட குறுங்காணொளி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டது.

அரசியலில் ஈடுபடும் ஒரு பெண்ணாக எனக்கு எதிராகப் பொது வெறுப்பைத் தூண்டும் வகையிலும், ஒழுங்கீனமானவராக என்னைத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலும், எனது நற்பெரைக் கெடுக்கும் நோக்கத்துடனும் இந்தத் தந்திரம் கையாளப்பட்டது. ​

இலங்கையில் பெண்களின் பாதுகாப்பு, மாண்பு மற்றும் உரிமைகளுக்கான தேசிய ஆணைக்குழுவிற்குத் தலைமை தாங்கும் அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில், உள்ளூராட்சி மன்ற சபைகள் பெண் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பான, கண்ணியமான சூழல் தொடர்வதை உறுதி செய்வதற்கு உங்களது உடனடித் தலையீடு மிக முக்கியமானதாகும்.

ஆகையால், கௌரவமான உங்களது அலுவலகத்தைக் பின்வருவனவற்றைச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.​

தொடர்புடைய அமைச்சு மற்றும் உள்ளூராட்சி மன்றக் கட்டமைப்புகள் மூலம் இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணையொன்றைத் தொடங்குதல்.

​21.07.2026 அன்று நடைபெற்ற சபை அமர்வின் முழுமையான, தொகுக்கப்படாத காணொளிப் பதிவுகளை வழங்குமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்குப் பணித்தல். ​

வாய்வழித் துஷ்பிரயோகம் மற்றும் சபை ஒழுக்கமீறலில் ஈடுபட்ட சபை உறுப்பினர் எம். நாசர் (அஸ்வத்) என்பவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்கான உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தல். ​

இணையவழி வன்முறைகள் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களில் இருந்து பெண் அரசியல் பிரதிநிதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிறுவன ஆதரவை வழங்குதல்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​