தலைப்புச் செய்திகள்

தேங்கிக் கிடக்கும் வாகன இலக்கத் தகடுகளை, ஜுன் 30க்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தல்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, உரிமை கோரப்படாத வாகன இலக்கத் தகடுகளை 2026 ஜூன் 30-ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதுமுள்ள மாவட்டக் கிளைகள் உட்பட, திணைக்களத்தின் வளாகங்களில் ஏறக்குறைய 100,000 இலக்கத் தகடுகள் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டும், விண்ணப்பதாரர்களால் இன்னும் பெற்றுக்கொள்ளப்படாத இலக்கத் தகடுகளே இவையாகும்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்திலிருந்து தங்களது பதிவுத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்டச் செயலக அலுவலகங்களில் அமைந்துள்ள அந்தந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கிளைகளுக்குச் செல்ல முடியும்.

நிலுவையில் உள்ள அனைத்துப் பதிவுத் தகடுகளையும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் நிர்வாகத் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் உரிமையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு 011‑2033333 என்ற இலகத்துடன் வாகனப் பதிவு எண் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு வாகன உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.