தலைப்புச் செய்திகள்

வீட்டுக் குளியலறையில் சாராயம் உற்பத்தி: சுற்றி வளைப்பில் சிக்கியது

– பாறுக் ஷிஹான் –

வீட்டின் குளியலறையில் சட்டவிரோதமாக சாராயம் உற்பத்தி செய்து வந்தமையை, அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கண்டு பிடித்தனர்.

அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்திலுள்ள வீடொன்றிலுள்ள குளியலறையில் – சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக, அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, மேற்படி இடம் சுற்றி வளைக்கப்பட்டது.

சோதனையின் போது, 3,60,000 மில்லி லிட்டர் கோடா, 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சும் உபகரணங்களுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கள்ளச் சாராயம், தமன மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களுடன், சந்தேக நபர் – நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.