தலைப்புச் செய்திகள்

ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியது

ஒபெக் (OPEC) அமைப்பிலிருந்து விலகுவதாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிவித்துள்ளது.

ஒபெக் என்பது – எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளைக் கொண்ட அமைப்பாகும். இதில் தற்போது 12 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

உலகில் எண்ணெய் விலையைத் தீர்மானிப்பது, அதனை நிலையாக வைத்திருப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக்-இல் இருந்து விலகுவதால், அந்த அமைப்பு பலவீனப்படும் என்று ரொய்ட்டர்ஸ் கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி அமைச்சர் சுஹைல் முகமது அல்-மஸ்ரூயி; பிராந்திய எரிசக்தி உத்திகளை கவனமாக ஆய்வு செய்த பின்னரே – இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஒபெக் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சவூதி அரேபியாவுடன், இந்த முடிவு குறித்து கலந்தாலோசித்தீர்களா என்று, அந்த நாட்டின் எரிசக்தி அமைச்சரிடம் கேட்டதற்கு, ஐக்கிய அரபு அமீரகம் வேறு எந்த நாட்டுடனும் இந்த விஷயத்தைப் பேசவில்லை என்று முகமது அல்-மஸ்ரூயி கூறியுள்ளார்.

ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகுவதும், ஒபெக் அமைப்பு பலவீனப்படுவதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-க்கு வெற்றி என்று ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய ட்ரம்ப்; “எண்ணெய் விலைகளை உயர்த்துவதன் மூலம் ஒபெக் அமைப்பு – உலகின் மற்ற நாடுகளைச் சுரண்டுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.