தலைப்புச் செய்திகள்

ஒரு எம்.பியின் வருமானம் எவ்வளவு; சம்பளச் சீட்டை பகிரங்கமாகப் பகிர்ந்தார் அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மார்ச் மாதத்துக்கான தனது நாடாளுமன்ற சம்பளச் சீட்டைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வருமானம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று கூறி, அவர் இதனைப் பகிர்ந்துள்ளார்.

அவர்பகிர்ந்த ஆவணத்தின்படி, மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் ரூ. 415,169.93 ஆகும். மொத்தம் ரூ. 19,308.71 சம்பளத்தில் கழிக்கப்பட்ட பிறகு, அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிகர சம்பளம் ரூ. 395,861.22 ஆகும்.

சம்பள விவரங்களில், மாதப்படி ரூ. 54,285, தொலைபேசிப்படி ரூ. 50,000, போக்குவரத்துப்படி ரூ. 15,000, அலுவலகப்படி ரூ. 100,000, எரிபொருள்படி ரூ. 179,707.93, மற்றும் அமர்வுப்படியாக ரூ. 15,000 உள்ளிட்ட இதர கொடுப்பனவுகள் அடங்கும்.

சம்பளத்தில் கழிக்கப்பட்ட தொகை- வருமான வரி, வீட்டு வாடகை, மின்சாரம், தண்ணீர் மற்றும் இதர கட்டணங்கள் அடங்கும்.

ஆவணத்தைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே மாதிரியான சம்பளத்தைப் பெறுகிறார்கள், ஆனால் அதன் விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வருமானம் குறித்த வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று தெரிவித்துள்ள அவர், அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன்பு, பொதுமக்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.