வலது காலுக்குப் பதிலாக இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம்

🕔 March 3, 2016

Child - 098சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிலிமத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வலது பக்க முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெறும் நோக்கில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர் – அவருக்கு சத்திர சிகிச்சையொன்றினை மார்ச் 01 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தார். இந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த வைத்தியர் பயிற்சி ஒன்றின் நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, சிறுமிக்கான சத்திர சிகிச்சையினை வேறொரு வைத்தியர் மேற்கொண்டார்.

சிகிச்சையின் பின்னர், சிறுமியின் வலது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்குப் பதிலாக, இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமையை சிறுமியின் தந்தை கவனித்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சத்திர சிகிச்சை நிபுணரிடம் சிறுமியின் தந்தை சுட்டிக் காட்டினார். அதன்போது, சிறுமியின் இடது காலிலும் வீக்கம் இருந்ததாகவும் அதனாலேயே இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறிய சத்திர சிகிச்சை நிபுணர், சிறுமியின் வலது காலிலும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். எனவே, மேலும் 03 நாட்களுக்கு சிறுமியை வைத்தியசாலையில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆயினும், சிறுமியின் தந்தை இது குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தார். பின்னர், வைத்தியசாலையின் உயர் வைத்திய அதிகாரியிடமும் இந்த விடயத்தைக் கொண்டு சென்றார்.

இதனையடுத்து விசாரணையொன்றினை வைத்தியசாலையின் உயர் வைத்திய அதிகாரி மேற்கொண்டதோடு, சிறுமியை ஆரம்பத்தில் பரிசோதித்த விசேட வைத்திய நிபுணர் வெளிநாட்டிலிருந்து எதிர்வரும் 08 ஆம் திகதி நாடு திரும்புவார் என்றும், அதன் பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை அவரின் பெற்றோர் – வேறொரு வைத்தியசாலையில் தற்போது அனுமதித்துள்ளனர்.

இவ் விவகாரம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்