தலைப்புச் செய்திகள்

சட்டத்தரணி மற்றும் மனைவியை கொலை செய்தவர்களின் வாகனம் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

ட்டத்தரணி ஒருவரையும் அவரின் மனைவைியையும் தலங்கம-அகுரகொடவில் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் – காலி அகலியவில் உள்ள ஒரு வீதியில் இந்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர்.

கார் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் – அது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

உயிரிழந்தவர்கள் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி என்றும், அவரது மனைவி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களின் வாகனம் அகலிய பகுதியில் விடப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.

‘கரந்தெனிய சுத்தா’ என அழைக்கப்படும் ஜெயலத் சில்வா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகர் இந்தக் கொலைகளைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கரந்தெனிய சுத்தா சார்பாக கொல்லப்பட்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்பு ஆஜரானார். ஆனால் பின்னர் ‘லொகு பெட்டி’ என்று அழைக்கப்படும் போட்டி குற்றவாளியை ஆதரித்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அகுரேகொடவிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் மேற்படி துப்பாக்கிச் சூடு நடந்தது. தாக்குதல் நடந்தபோது தாக்குதலுக்குள்ளானவர்கள் ஒரு வாகனத்திற்குள் இருந்தனர் என்றும், அவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.