
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல, தான் ஒரு கலாநிதி என்பதை நிரூபிப்பதற்கான ஆவணத்தை சமர்பிப்பதற்கு நீண்ட காலமாகத் தவறியதைக் கருத்தில் கொண்டு, அவர் கூறிய கலாநிதிப் பட்டத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் அவரிடம் இருப்பதாக தான் நம்பவில்லை என்று, போக்குவரத்து, வீதி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (19) கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ, விரைவில் அந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று 2024 நொவம்பரில் உறுதியளித்தார். இருந்த போதிலும், சான்றிதழை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அத்தகைய நடவடிக்கைக்கு தேவையான நேரம் கடந்துவிட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒப்புக்கொண்டார்.
“சான்றிதழ் இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று பிமல் ரத்நாயக்க கூறினார்.
“அது இருந்தால் அதை வழங்குவதற்கு அவருக்கு போதுமான நேரம் கடந்துவிட்டது. அதை வழங்குவதாக அவர் நாட்டிற்கு உறுதியளித்தார். ஆனால் அவர் அதை வழங்கவில்லை”.
அசோக ரன்வல – சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு, இதுவே முக்கிய முக்கிய காரணம் என்று அமைச்சர் விளக்கினார். நாட்டின் மூன்றாவது தரததிலுள்ள குடிமகனாக பதவி வகித்த ஒருவருக்கு – இந்த நீக்கம் ஒரு கடுமையான அரசியல் மற்றும் சமூக தண்டனை” என்றும் அமைச்சர் பிமல் விவரித்தார்.
“அவர் ஒரு உண்மையான ஆராய்ச்சியாளர் என்று நாங்கள் நம்புகிறோம். அது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் அவருக்கு எந்த சான்றிதழும் இல்லை என்று நான் நம்புகிறேன்” என்றும் பிமல் ரத்நாயக்க கூறினார்.
“நாட்டிற்கு அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டால், நாங்கள் எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கை அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவதுதான். அதை நாங்கள் செய்துள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


