
பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டம், எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், நன்மைகளை பெறுவதற்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வருடாந்த வருமான எல்லை 180,000 ரூபாயிலிருந்து 240,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெற்றோரின் மரணத்தின் போது மாணவர்களுக்குக் கிடைக்கும் காப்புறுதிப் பலன்கள் – மேலும் பலருக்குச் சென்றடைய வழிவகுக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களின்படி, முதுகெலும்பு பாதிப்பு (Scoliosis) சிகிச்சைக்கான கவசங்கள் மற்றும் செவிப்புலன் தொடர்பான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள 75,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், நீண்டகாலப் பாரதூரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு 20,000 ரூபாய் வரை உதவி வழங்கப்படுவதுடன், நுரையீரல் பாதிப்பு (Pneumothora), மூளைக்காய்ச்சல் (Encephalitis), தலசீமியா (Thalassemia), பரம்பரை இரத்த சோகை (Hereditary Spherocytosis), அரிவாள் உயிரணு இரத்த சோகை (Sickle Cell Anaemia) ஆகிய ஐந்து நோய்கள் – இந்த காப்புறுதிப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தமது காப்புறுதி கோரிக்கைகளை இலகுவாகச் சமர்ப்பிக்கும் வகையில், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எந்தவொரு பிராந்திய அலுவலகத்திலும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


