
முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளானமையை அடுத்து, அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மஹர நீதவான் பண்டார இலங்கசிங்க நேற்று (19) உத்தரவிட்டார்.
சப்புகஸ்கந்த பகுதியில் டிசம்பர் 11 ஆம் திகதி – வாகன விபத்தை ஏற்படுத்தியதாக ரன்வல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
ரன்வலவை சாரதி தகுதி சோதனைக்கு உட்படுத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தில் ஆஜர்படுத்தவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, அவரின் சட்டத்தரணி கூறினார்.
ரன்வல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சேகரிக்கப்பட்ட சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள், விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தாரா என்பதை தீர்மானிப்பதற்காக, ரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காலில் காயமடைந்த பெண்ணுக்கு 50,000 ரூபாயும், காயமடைந்த குழந்தை மற்றும் தாய்க்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்பட்டதாக, சந்தேக நபரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்றும், ஆனால் பாதிக்கப்பட்டவர் அதை ஏற்க ஒப்புக்கொண்டால், நீதிமன்றம் அதில் தலையிடாது என்றும் நீதவான் தெளிவுபடுத்தினார்.
காயமடைந்த பெண்ணின் கணவர், பணத்தைப் பெறத் தயாராக இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபர் காயமடைந்திருக்கவில்லை, அவர் ஏன் வைத்தியசாலையில் இருக்கிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ரன்வலவின் உடல்நிலை சரியில்லாததே காரணம் என்று சட்டத்தரணி பதிலளித்தார்.
வழக்கு மேலும் விசாரணைக்காக ஜனவரி 16 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.


