
ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் வங்கிக் கணக்கினுள் புகுந்து – ஒன்லைன் கும்பலொன்று பெருந்தொகை பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் – மேற்படி சர்வதேச ஒன்லைன் மோசடிக் கும்பல், நீதிபதியின் வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை அஞ்சல் திணைக்களம் போல் நடித்து, ஒரு பார்சலுக்கான ஒன்லைன் கட்டணம் செலுத்தும்படி அவரைக் கேட்டு, கிட்டத்தட்ட 04 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
அஞ்சல் திணைக்களத்தின் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், பெறுநரிடம் 100 ரூபாய்க்கும் குறைவான ஒரு கட்டணத்தை, ஒன்லைன் இணைப்பு மூலம் செலுத்துமாறும், குறுந்த தகவல்களை இந்த மோசடியாளர்கள் அனுப்புகின்றனர். இதனையடுத்து சிலர் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டதும், மோசடி செய்பவர்கள் கணக்கிற்குள் அங்கீகரிக்கப்படாத முறையில் புகுந்து, அதிலுள்ள பணத்தைத் திருடி வெளிநாட்டு நாணயமாக மாற்றுகிறார்கள் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி – மருதானை அஞ்சல் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மோசடிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குழு – இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார கூறியுள்ளார்.
அஞ்சல் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சம்லி விஜிதபால இது தொடர்பில் குறிப்பிடுகையில்; இந்தத் திட்டம் வேகமாக விரிவடைந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு பெரும்பாலும் பிரபலமான உள்ளூர் ‘பிராண்ட்’களின் பெயர்களைப் பயன்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளார். அமெரிக்க டொலர்கள், அவுஸ்ரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், சுவிஸ் பிராங்குகள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட்கள் போன்ற அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களில் இழப்புகள் குறித்து பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோசடி செய்பவர்கள் அதிகாரப்பூர்வ அஞ்சல் திணைக்களப் பக்கத்தைப் போன்ற போலி வலைத்தளங்களை உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள OTP குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு, இலங்கை CERT மற்றும் சிஐடி-யின் கணினி குற்றப் பிரிவு ஆகிய அனைத்திற்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகள் மூலம் எந்தவொரு ஒன்லைன் கட்டணத்தையும் தபால் திணைக்களம் கேட்பதிலலை என்பதை வலியுறுத்தியுள்ளதோடு, அஞ்சல் சேவைகளுடன் இணைக்கப்பட்டதாகக் கூறி இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என்று – பொதுமக்களை அஞ்சல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.


