தலைப்புச் செய்திகள்

70 வயது பௌத்த துறவி, பாலியல் குற்றம் புரிந்தார் என அவுஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

அவுஸ்ரேலியாவின் – மெல்போர்ன் விகாரையில் 06 சிறுமிகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூத்த பௌத்த துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவி நாவோதுன்னே விஜித, 1994 மற்றும் 2002 க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தக் குற்றங்களைச் செய்ததாக கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் இன்று (30) வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

70 வயதான பௌத்த துறவி, 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் குற்றம் புரிந்தமை தொடர்பில் எட்டு குற்றச்சாட்டுகளிலும், 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, ஒரு அநாகரீகமான செயலைப் புரிந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஒரு சிறுமியுடன் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் ஒவ்வொரு நாளும் – குற்றம் சாட்டப்பட்ட பௌத்த துறவியை ஆதரிக்கும் வகையில் அங்கு வந்திருந்த – பௌத்த விகாரையைச் சேர்ந்தோர், நடுவர் மன்றம் அறையை விட்டு வெளியேறிய பிறகு, நீதிமன்ற அறையில் அழுதனர் என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நாட்டு சட்டத்தின் படி, மேற்படி பௌத்த துறவி – அவர் மீதான குற்றங்களுக்காக 10 வருடங்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்படலாம் எனவும் செய்திகள் கூறுகின்றன.

விசாரணையில் துறவிக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு, 30 வயதுடைய 06 பெண்கள் முன்வந்திருந்தனர்.

குறித்த பௌத்த துறவி, தனது அதிகாரப் பதவியை துஷ்பிரயோகம் செய்து இளம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டினர்.

குற்றம்சாட்டப்பட்ட துறவி, குறித்த பெண்களில் சிலரிடம் டிஜிட்டல் ஊடாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிலரை தகாத முறையில் தொட்டதாக அல்லது அவரது ஆண்குறியில் கை அவர்களின் கையை வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இனிப்புகளைக் கொடுத்து இளம் சிறுமிகளை கோவிலில் உள்ள தனது குடியிருப்புக்குள் கூட்டிச் சென்றார் எனக் கூறப்படுகிறது.

இவ்வாறு பாலியல் குற்றத்துக்கு ஆளானவர்கள் பொலிஸ் நிலையம் சென்றமையை அடுத்து, 2023 இல் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், வயதான துறவி அனுபவிக்க வேண்டிய தண்டனை குறித்து அரசு தரப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தரணிகள் மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை மேற்கொள்வார்கள்.