
நாட்டில் கடந்த 09 மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி. மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்..
இந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்; வீதி விபத்துக்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எனவே, அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான சட்ட அமுலாக்கத்தினையும் பொறுப்பான வாகனம் ஓட்டுதலின் அவசரத் தேவையினையும் அவர் வலியுறுத்தினார்.
பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதைக் கண்காணிக்க, நாடு முழுவதும் போக்குவரத்துப் பொலிஸார் 70 அதிவேக கண்டறிதல் இயந்திரங்களை நிறுவியுள்ளது எனவும் அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், 923 விபத்துகளில் 514 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.



