தலைப்புச் செய்திகள்

கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் விமானத் தாக்குதல்

கத்தார் தலைநகர் தோஹாவில் – இஸ்ரேல் விமான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹமாஸ் உயர்மட்டத் தலைவர்கள் மீது – இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்மொழிவு குறித்து, தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, ​​ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலை “கோழைத்தனமானது” என கண்டித்த கத்தார், இது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறிய நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான ‘ஷின் பெட்’ உடன் இணைந்து, அதன் விமானப்படை, கத்தார் தலைநகரில் ஹமாஸ் உயர்மட்டத் தலைவர்கள் மீது, இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் – மக்கள் குடியிருப்புப் பகுதி என, அல் ஜெசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களாக – லெபனான், சிரியா மற்றும் ஏமனில் – இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நேற்று, துனிசியாவில் நிறுத்தப்பட்டிருந்த காஸா நோக்கிச் செல்லும் மனிதாபிமான கப்பல் மீதும் இஸ்ரேலிய ட்ரோன் ஒன்று தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.