தலைப்புச் செய்திகள்

ஆடை விவகாரத்தில் அநீதியிழைக்கப்பட்ட மஸாஹினாவுக்கு, உச்ச நீதிமன்றம் நீதி வழங்கி தீர்ப்பு

தர்ம சக்கரம் போன்ற சின்னம் கொண்ட ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கைது செய்து – தடுத்து வைத்தமை, அவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளது.

கொலொங்கொடையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மஸாஹினா என்ற அந்தப் பெண்ணை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ், ஹசலக பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி சந்தன நிஷாந்த கைது செய்தார்.

இருப்பினும், அந்த உடையில் இருந்த வடிவமைப்பு மத சின்னமாக இல்லாமல் கப்பல் ஸ்டீயரிங் போல இருந்தது என்பது பின்னர் தெரியவந்தது.

நீதியரசர்கள் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோருடன் ஒருமனதாக தீர்ப்பை வழங்கிய நீதியரசர் யசந்த கோடகொட, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இழப்பீடாக ரூ. 30,000 ரூபாயை தனிப்பட்ட முறையில் வழங்க உத்தரவிட்டார்.

பொலிஸ் நிலையங்களில் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, சட்டமா அதிபரின் ஒப்புதலுக்கு உட்பட்டு – தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடவும் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.

மஸாஹினாவின் வழக்கறிஞர் புலஸ்தி ஹேவமன்னா, தனது கட்சிக்காரர் தனது ஆடை புனிதமான பௌத்த சின்னத்தைக் காட்டியதாக தவறான நம்பிக்கையின் கீழ் தவறாகக் கைது செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் அது பொய்யானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: நயோமி கோல்மனும், கொலங்கொட மஸாஹினாவும்: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான நெருக்குவாரங்கள்