
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குறித்து, நேற்று (19) தென் மாகாண கல்வித் துறை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.
“அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும். மேலும் ஆசிரியர் நியமனங்களை பெறும் பட்டதாரிகள் – ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் நேரடியாகச் சேரும் பல பட்டதாரிகள் – ஆசிரியர் பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். ஆசிரியர் பயிற்சி பெறுபவர்கள் பெரும்பாலும் பட்டம் பெறாதவர்களாக இருக்கின்றனர். இந்த முறை குறைபாடுடையது என்று அவர் மேலும் கூறினார்.
“முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்த ஒரு கல்விப் பேரவையை நிறுவ நாங்கள் முன்மொழிந்துள்ளோம்” என்று பிரதமர் ஹரினி மேலும் தெரிவித்தார்.



