தலைப்புச் செய்திகள்

நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்: ஈர நெல்லுக்கும் விலை நிர்ணயம்

நெல் கொள்வனவு நடவடிக்கை நாளை (03) முதல் தொடங்கும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை தொடக்கம் பல மாவட்டங்களில் – அரச களஞ்சியசாலைகள் திறக்கப்படும்.

இந்த அறிவிப்பை விவசாயம் மற்றும் கால்நடை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையில் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, நெல்லை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணத்திலும் நெல் கொள்முதல் தொடங்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுபோகத்தில் நெல் கொள்முதல் செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் முன்னர் அறிவித்தது.

அதன்படி, அரசாங்கம் பின்வரும் நிலையான விலைகளில் நெல் கொள்முதல் செய்யும்:

  • நாடு – ஒரு கிலோகிராம் 120 ரூபாய்
  • சம்பா – ஒரு கிலோகிராம் ரூ. 125
  • கீரி சம்பா – 01 கிலோகிராம்132 ரூபாய்

இதேவேளை, ஈரமான நெல்லுக்கு நிலையான விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

விலைகள் பின்வருமாறு:

  • நாடு – ஒரு கிலோவு 102/=
  • சம்பா ஒரு கிலோ ரூ. 105/=
  • கீரி சம்பா ஒரு கிலோ 112/=

இருப்பினும், அரசாங்க களுஞ்சியசாலைகளில் ஈரமான நெல்லை சேமிக்க வசதிகள் இல்லை என்றும், எனவே விநியோகிப்பதற்கு முன் நெல்லை முறையாக உலர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து – விவசாயிகளுக்கு உதவுமாறும், சக நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.