தலைப்புச் செய்திகள்

ஊட்டச் சத்து குறைபாட்டால் காஸாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு: பட்டியினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அறிவித்தது.

இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் முற்றுகை, எல்லையைக் கடக்கும் பாதைகளை மூடுகின்றமை மற்றும் குழந்தைகளுக்கான மருந்து, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை நிறுத்துகின்றமை – ஆகியவற்றின் நேரடி விளைவாக இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பட்டினியால் வாட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் – வேண்டுமென்றே பின்பற்றப்பட்ட கொள்கையின் விளைவாக, இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஊடக அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

பட்டினியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவது – போர்க்குற்றம் என்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் எனவும் அந்த செய்தி விவரித்துள்ளது.

இஸ்ரேலிய படைகள் பல மாதங்களாக காஸாவில் குழந்தைகளுக்கான மருந்து மற்றும் உயிர்காக்கும் மருத்துவ ஊட்டச்சத்துக்கள் நுழைவதைத் தடுத்துள்ளன. முற்றுகை உடனடியாக நீக்கப்படாவிட்டால், இன்னும் பல குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இதே கதியை எதிர்கொள்வார்கள் என்றும் ஊடக அலுவலகம் எச்சரித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் சர்வதேச சமூகம் காத்து வரும் மௌனத்தை அரச அலுவலகம் கண்டித்துள்ளது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கான துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவளை, இந்த இறப்புகளுக்கு இஸ்ரேல் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும், இனப்படுகொலைக்கு வழிவகுத்ததற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் அரசு அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.