தலைப்புச் செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்துக்கு ஷானி அபேசேகரவை பதில் பொலிஸ் மா அதிபர்  பிரியந்த வீரசூரிய பரிந்துரைத்திருந்தார்.

2017 முதல் 2019 வரை முன்னாள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், ஒக்டோபர் 2024ஆண் ஆண்டு மீண்டும் பொலிஸ் சேவையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனத்திற்கு முன்பு – குற்றப் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, கைது செய்யப்பட்டு விளக்க மறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.