
கட்டார், ஈராக், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து, ஈரான் பெரியதொரு ராணுவ பதிலடியை தொடங்கியுள்ளதாக ‘குத்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை தொடங்கியதாக ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது.
கட்டாரிலுள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளத்தை குறைந்தது 06 ஏவுகணைகள் தாக்கின. ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஈராக் முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் சைரன்கள் தொடர்ந்து ஒலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரிலுள்ள அல்-உதெய்த் தளத்தை ரொக்கெட்டுகள் தாக்கியதாகவும், உடனடி ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் குத்ஸ் நியூஸ் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களை அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ‘வலுவான பதிலடியின் ஆரம்பம்’ என்று ஈரானிய ஊடகங்கள் விவரித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈராக், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்களில் உள்ள பதுங்கு குழிகளில் அமெரிக்க படையினர் தஞ்சம் புகுந்ததை பிராந்தியத்தில் உள்ளோர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழப்புகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது சமீபத்தில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் 19 ராணுவத் தளங்கள் உள்ளன. இவற்றில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் படையிலான படையினர் உள்ளனர்.



