தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் நடந்த ‘திருகுதாளங்கள்’ குறித்து விளக்கம்

முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் 11 கைதிகளும் இவ்வாறு சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக, நேற்று (12) ஊடகங்களிடம் பேசிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

“தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் அங்கீகரிக்கப்படாத விடுதலை குறித்து சி.ஐ.டி விசாரணையைத் தொடங்கியது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 11 கைதிகளும் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவங்களை மேலும் விசாரிக்க சி.ஐ.டி ஒரு குழுவை நியமித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தேனிய, விசாரணைகள் மற்றும் குழுவின் நியமனம் குறித்து அறிந்திருந்தார் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

“இதற்கு மத்தியில், தண்டனை பெற்ற கைதிகளின் விடுதலை இயல்பானது என்றும் நியாயமானது எனவும் துஷார உபுல்தெனிய – நீதி அமைச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் கைதியின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்காமல், அவர் நீதி அமைச்சுக்கு ஒரு நியாயத்தை அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து சிஐடி மேலும் விசாரணைகளை நடத்தி, அவரைக் காவலில் எடுத்தது” என்று அவர் விவரித்தார்.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றமையினால், நடந்து வரும் பொலிஸ் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர இந்த விடயங்களைக் கூறினார்.

2025 வெசாக் தின ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் – டபிள்யூ.எம். அதுல திலகரத்ன எனும் கைதி, அனுராதபுரம் சிறையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. பின்னர், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்ட 388 கைதிகளின் உத்தியோகபூர்வ பட்டியலில் அதுல திலகரத்னவின் பெயர் இல்லை என்றும், நீதிமன்ற ஆவணங்களால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மன்னிப்பு முறையின் கீழ் சட்டவிரோதமாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.