தலைப்புச் செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்து: 204 சடலங்கள் மீட்பு

இந்தியாவில் இன்று (12) பகல் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த 242 பேரில் 204 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மேகானி நகர் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்துக்கும் விமான நிலையத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 1.7 கிலோமீற்றர் தூரம் உள்ளது.

குறித்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். அவர்களில் 230 பயணிகள், விமானப் பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவராவர்.

பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடாவை சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கடைசி சிக்னல் கிடைத்துள்ளது. அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி ‘மேடே அழைப்பு’ (Mayday call) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்துள்ளார். (மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரக்கால சமிக்ஞை. இது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்புகளில் உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கப் பயன்படுகிறது).

அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மதியம் 1:38க்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதிலுள்ள – வைத்தியர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.