தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகன ஏலம்: 200 மில்லியன் ரூபாய் வருமானம்

னாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்பட்டன. 

முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணிக்கு அமர்த்திய ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமுக்காக வழங்கியிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்தன. அவற்றில் அவற்றில் 17 வாகனங்கள் இன்று ஏலத்தில் விற்பனையாகின. 

அதன்படி, BMW மோட்டார் வாகனம் 01, Ford Everest ரக வாகனம் 02, Hyundai Terracan ஜீப் 01, Land Rover Discovery வாகனங்கள் 02, Mitsubishi Montero ஜீப் 01, Nissan பெட்ரோல் ஜீப் 03, Nissan வகை கார்கள் 02, Porsche Cayenne ரக வாகனம் 01, SsangYong Rexton ஜீப் 05, LandCruiser Sahara வகை ஜீப் 01, V 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன. 

அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வாகன ஏலத்தில் 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.