
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற வேண்டியவர்களுக்கு – தபால் திணைக்களம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள், வேலை நேரத்தில் தங்கள் உள்ளூர் தபால் அலுவலகத்திற்குச் சென்று – தமது அடையாளத்தை நிரூபித்து அவற்றைப் பெறலாம் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் திகதியன்று மாலை 4.00 மணி வரை இது அமுலில் இருக்கும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி ஏப்ரல் 16 ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் திகதி நிறைவடைந்தது.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணியின் போது – அதனைப் பெற்றுக் கொள்ளும் வாக்காளர் ஒருவர் தனது கையொப்பத்தை இட வேண்டும்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நேரத்தில் – அதற்குரியவர் வீட்டில் இல்லை என்றால், வாக்காளர் அட்டைகள் அவர்களின் பிரதேச தபால் அலுவலகத்தில் வைக்கப்படும் என்றும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வாக்காளர் அட்ட இன்றி, வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தேவையான அடையாள ஆவணங்களை வாக்காளர்கள் வழங்க முடிந்தால், அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது.



