தலைப்புச் செய்திகள்

மு.காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு செயலாளர் மீது, கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல்: உதுமாலெப்பை எம்.பிக்கு எதிராகவும் கூச்சல்: நிந்தவூரில் சம்பவம்

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் செயலாளர் ஏ.சி. சமால்டீன் என்பவர் மீது, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களே கடந்த 24ஆம் திகதி நிந்தவூரில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் சென்று கொண்டிருந்த போது, மேற்படி சமால்டீன் என்பவரை கட்சியின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

‘புதிது’ செய்தித்தளத்துக்கு இந்தத் தகவல் அன்றைய தினமே கிடைத்த போதும், அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், சமால்டீன் என்பவர் தாக்கப்பட்டதை, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று (26) இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசும் போது உறுதிப்படுத்தினார்.

நிந்தவூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தலைமையில் கடந்த 24ஆம் திகதி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி, உதுமாலெப்பை எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் மேற்கூறப்பட்ட சமால்டீன் என்பவரும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், குறித்த பிரசாரக் கூட்டம் முடிவடைந்து – மேடையிலிருந்து ரஊப் ஹக்கீம் இறங்கிச் செல்லும் போது, அவர் பின்னால் சமால்டீன் என்பவரும் நடந்து சென்ற வேளையிலேயே – சமால்டீன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குலுக்குள்ளான சமால்டீன் அந்த இடத்திலிருந்து ஓடிச் சென்று – தற்காத்துக் கொண்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

கல்முனை மாநகர சபையில் ஒரு சிற்றூழியராக மேற்படி சமால்டீன் பணியாற்றி வருகிறார். அவரை, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்ட – அம்பாறை மாவட்டத்தின் மத்திய குழுத் தலைவராக நியமித்துள்ளமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய எதிர்ப்புகள் உள்ளன.

இது இவ்வாறிருக்க, நிந்தவூர் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறப்பினர் உதுமாலெப்பைக்கு எதிராகவும் அங்கிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு, உதுமாலெப்பைக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது, அவர் மேடையிலிருந்து இறங்கிப் போக வேண்டும் என சத்தமிட்டுள்ளனர்.

தான் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டதாக, நாடாளுமன்றம் உறுப்பினர் உதுமாலெப்பையும், அட்டாளைச்சுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய போது உறுதிப்படுத்தினார்.

மேலும், தனக்கு நேர்ந்த மேற்படி அவமானத்தின் பின்னணியில் நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்தான் உள்ளார் என்பதை சாடைமாடையாக சுட்டிக்காட்டிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை’; “நான் பைசல் காசிமுடைய தோளில தட்டி, நீங்கள் அட்டாளைச்சேனைக்கு வரத்தானே வேண்டும் என்று கூறி விட்டுத்தான் வந்துள்ளேன்” எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் சொந்த ஊர் அட்டாளைச்சேனை என்பது குறிப்பிடத்தக்கது.