
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டேன் பிரியசாத் இறந்து விட்டமையை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
39 வயதுடைய டேன் பிரியசாத், நேற்று (22) இரவு வெல்லம்பிட்டியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
மோட்டார் பைக்கில் வந்த இருவர் – டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதற்காக பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
டேன் பிரியசாத் மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு தோட்டாக்கள் மார்பிலும், இரண்டு தோட்டாக்கள் தோளிலும் பாய்ந்துள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு நபரும் சிறிய காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்றிரவு டேன் பிரியசாத் இறந்து விட்டதாக பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், பின்னர் அந்த அறிக்கையை மீளப்பெற்று – அவர் உயிருடன் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே டேன் பிரியசாத் மரணித்து விட்டார் என பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், துப்பாக்கியைப் பயன்படுத்தி பல துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



