தலைப்புச் செய்திகள்

சஊதி அரேபியாவுக்குள் நுழைய 14 நாட்டவர்களுக்கு இடைக்காலத் தடை

சஊதி அரேபியா 14 நாட்டவர்களுக்கு தற்காலிக வீசா தடையை அறிவித்துள்ளது. இந்தத் தடை உம்ரா, வர்த்தக மற்றும் குடும்ப வீசாகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ ஆகியவை இடைக்கால தடை விதிக்கப்பட்ட நாடுகளாகும்.

இந்தத் தற்காலிகத் தடை – ஜூன் மாதம் நடுப்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உம்ரா வீசாகளை வைத்திருக்கும் தனிநபர்கள் – ஏப்ரல் 13ஆம் திகதி வரை சஊதி அரேபியாவிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில், சஊதி அரேபியாவுக்குள் ‘விசிட்டர்ஸ்’ (visitors) வீசாகளில் நுழைந்தவர்கள், ஹஜ் செய்வதற்காக சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர். இதனால், ஹஜ கடமையில் அதிக நெரிசல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்தது.

மேலும், வர்த்தக மற்றும் குடும்ப வீசாக்களைப் பயன்படுத்தும் பயணிகள், அங்கீகரிக்கப்படாத வேலையில் ஈடுபட்டதாகவும், வீசா விதிகளை மீறி – தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சஊதி அதிகாரிகள் இவற்றில் ஓர் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்துகின்றனர்.

ஹஜ் பருவத்தில் பயண விதிமுறைகளை நெறிப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் தற்காலிக வீசா தடை உதவும் என்று சஊதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அபராதங்களைத் தவிர்த்துக்கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட பயணிகள் புதிய விதிகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, சஊதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தனிநபர்கள், சஊதி அரேபியாவுக்குள் எதிர்காலத்தில் நுழைவதற்கு ஐந்து ஆண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.