தலைப்புச் செய்திகள்

சட்டத்தரணி சுவஸ்திகாவை பாலியல் ரீதியாக திட்டிய அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிமல் கோரிக்கை

மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருளிலங்கத்தை, மிக மோசமாகவும் பாலியல் ரீதியாகவும் திட்டி எழுதியஅர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு, சபாநாயகரிடம் – சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் (17) உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் – சட்டத்தரணி சுவஸ்திகாவை பாலியல் ரீதியாக தூசித்துள்ளதாக முறைப்பாடுகள் வந்துள்ளன எனக் கூறினார்.

இந்த விவகாரம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கொண்டுவரப்பட்டதாகவும், சுவஸ்திகாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மோசமான பாலியல் தாக்குதலை எழுத்தில் வெளியிட்டமை நாடாளுமன்றத்திற்கும் தெரியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி – தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் – அவரின் பேஸ்புக் பக்கத்தில், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கத்துக்கு எதிராக, அவதூறான கருத்துக்களை வெளியிட்டமையை அடுத்து, பிமல் ரத்நாயக்க இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் YouTuber ஒருவரின் பெயரை நாடாளுமன்றத்தில் கூறிய அர்ச்சுனா ராமநாதன், அந்தப் பெண்ணை விபச்சாரி என்று கூறினார்.

இதனையடுத்து அர்ச்சுனா எம்.பியின் இந்த உரைக்கு எதிராகவும், முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக இனவாத ரீதியில் பேசுவதைக் கண்டித்தும், சட்டத்தரணி சுவஸ்திகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், சட்டத்தரணி சுவஸ்திகாவை மிகவும் கீழ்தரமான சொற்களால் தாக்கி எழுதியிரு்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சட்டத்தரணி சுவஸ்திகா மீதும் கீழ்தரமான வார்த்தைகளால், அர்ச்சுனா எம்.பி வன்மத் தாக்குதல்