தலைப்புச் செய்திகள்

இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற PHI க்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ர்த்தக உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் 02 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட கலேவெலவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரை (PHI) மார்ச் 11 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் சுசந்த இசுரு ரத்நாயக்க பண்டார கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் பெப்ரவரி 15 ஆம் திகதி தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அவரின் விளக்கமறியல் காலம் இன்று (03) நிறைவடைந்தமையை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் இன்று அவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பிரதம நீதவான், சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் முன்னேற்றத்தை மார்ச் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.