தலைப்புச் செய்திகள்

ஹமாஸ் ஒப்படைத்த நான்கு உடல்களில் ஒன்று பொய்யானது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

படத்தில் நடுவில் காணப்படுகின்றவர் ஷிரி பிபாஸ்

ஹமாஸ் நேற்று (20) இஸ்ரேலிடம் ஒப்படைத்த 04 பணயக் கைதிகளின் உடல்களில் ஒன்று, சிறைபிடிக்கப்பட்ட ஷிரி பிபாஸ் எனும் பெண்ணின் உடல் அல்ல என்று, தடயவியல் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்து, இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் மிகக் கடுமையான மீறலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.

“அடையாளம் காணும் செயல்பாட்டின் போது, ​​ஹமாஸ் அனுப்பிய உடல்களில் ஒன்று ஷிரி பிபாஸின் உடல் அல்ல என்றும், வேறு எந்த பணயக்கைதியுடனும், அந்த உடல் ஒத்துப்போகவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இது ஒரு பெயர் தெரியாத, அடையாளம் காணப்படாத உடல்” என்று இஸ்ரேல் ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அனுப்பி வைத்த உடல்களில் ஷிரி பிபாஸ் எனும் பெண்ணின் உடலும், அவரின் இரண்டு ஆண் குழந்தைகளின் உடல்களும், மற்றொரு ஆணின் உடலும் உள்ளன என்று – ஹமாஸ் தெரிவித்திருந்தது.

ஆனாலும் ஹமாஸ் அனுப்பி வைத்த உடல்களில், இறக்கும் போது நான்கு வயது என்று கூறப்படும் ஏரியல் பிபாஸ், இறக்கும் போது 10 மாத வயது என்று கூறப்படும் கிஃபிர் பிபாஸ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

மற்றையது பத்திரிகையாளர் மற்றும் அமைதி ஆர்வலர் ஓடெட் லிஃப்ஷிட்ஸின் உடல். அது குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், “எங்கள் இதயங்கள் உடைந்து போகலாம், ஆனால் எங்கள் ஆத்மா உடைந்து போகாது” என்று கூறியுள்ளதோடு, ”அனைத்து இஸ்ரேலியர்களும் ஆத்திரத்துடன் கலந்த வலியை உணர்கிறார்கள். நாங்கள் ஹமாஸை ஒழிப்போம் என்று தெரிவித்துள்ளார்.