
அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.
அதன்படி பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு – அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு, ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக, அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000 பேர், பாதுகாப்பு அமைச்சில் 09 பேர், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179 பேர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132 பேர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 பேர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161 பேர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519 பேர், மேல் மாகாண சபையில் 34 பேர், கிழக்கு மாகாண சபையில் 05 பேர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 பேர் என, மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



