
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது அண்டை வீட்டாரைத் தாக்கியதாகக் கூறி – உதயங்கவை மிரிஹான பொலிஸார் இன்று (10) கைது செய்தனர்.
உதயங்க வீரதுங்கவினால் தாக்கப்பட்ட தலபத்பிட்டியவைச் சேர்ந்த 66 வயதுடைய நபர், ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
உதயங்கவின் வளவு எல்லைச் சுவரை – நுகேகொட, தலபத்பிட்டிய, கனத்த வீதியைச் சேர்ந்த அண்டை வீட்டைச் சேர்ந்தவர் உடைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நேற்று (09) அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உதயங்க வீரதுங்க தனது அண்டை வீட்டு நபரை – பிளாஸ்டிக் குழாயால் தாக்கியதால், அந்த நபரின் மூக்கு உடைந்துள்ளதோடு, முகத்திலும் காயங்கள் ஏற்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்து மிரிஹான பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தொடர்பான செய்தி: பக்கத்து வீட்டாரைத் தாக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க கைது – வீடியோ இணைக்கப்பட்டுள்ளது



