தலைப்புச் செய்திகள்

05ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து, இறுதி முடிவு எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2024ஆம் ஆண்டுக்கான 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் இன்று (31) வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்த பின்னர் – அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அமித் ஜயசுந்தர, இலங்கையில் 3,000க்கும் மேற்பட்ட ஆரம்பப் பாடசாலைகள் உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கல்வியாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார். மேலும் இறுதியாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய பிள்ளைகள், இந்தப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் தரம் 06 இல் நுழைய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் இறுதித் தீர்மானத்தை எட்டியதும், வெட்டுப் புள்ளிகளை உடனடியாக வெளியிடுவதற்காக, பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இருந்தபோதிலும், 2024ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக, இந்த செயல்முறை சவால்களை எதிர்கொள்ளும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இது இவ்வாறிருக்க உயர்தரப் பரீட்சைகளும் நடைபெற்று வருவதையும் அவர் நினைவுபடுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “உச்ச நீதிமன்றின் 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை இன்று பெற்றேன். மிகவும் பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து அதை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 03 விருப்பங்களில் எது மிகவும் பொருத்தமானது என்பதை என்னால் உடனடியாக சொல்ல முடியாது. நாம் அதைப் படிக்க வேண்டும்.”

“வழக்கமாக, புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 40 நாட்கள் ஆகும். அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்களுக்குமாக, அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானத்தின் மூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று (31) வழங்கிய தீர்ப்பில் அறிவித்துள்ளது

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் ii இன் மூன்று கேள்விகளை கசியவிடுவதற்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க, 03 மில்லியன் ரூபாயையும், பாடசாலை ஆசிரியர் சமிந்த குமார இலங்கசிங்க 02 மில்லியன் ரூபாயையும் அரசுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.