
– அஹமட் –
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் – தனது கடமை நேரத்தில் வேறொரு திணைக்களம் நடத்திய பரீட்சையொன்றின் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து, அற்காகவும் கொடுப்பனவை பெற்றுக் கொண்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜுன் மாதம் 08ஆம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குச் சமூகமளித்த அந்தப் பாடசாலை அதிபர் ஏ.எல். பாயிஸ் என்பவர், பாடசாலை வரவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆயினும் – அவரின் கடமை நேரத்தில், அதே பாடசாலையின் மண்டபமொன்றில் – கிராம அபிவிருத்தித் திணைக்களம் நடத்திய தையல் பயிற்சி டிப்ளோமா பரீட்சையின் மேற்பார்வையாளராகவும் கலந்து கொண்டுள்ளார். அதற்காக 3.000 ரூபாய் கொடுப்பனவையும் அவர் கையெழுத்திட்டுப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோசடி தொடர்பாக குறித்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் – புதிது செய்தித்தளத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து, இந்த விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில், கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டக் காரியாலயம் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதிது செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியர் – தகவல்களைக் கோரியிருந்தார்.
அதற்கிணங்க, அந்த நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் படி – கடந்த ஜுன் 08ஆம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல். பாயிஸ் கடமைக்குச் சமூகளித்துள்ளார். அதேவேளை அன்றைய தினம் அவரின் கடமை நேரத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களம் நடத்திய தையல் டிப்ளோமா பரீட்சையின் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து அதற்காக 03 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் பெற்றுள்ளமை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடியான நடவடிக்கை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் கல்வியமைச்சு ஆகியவற்றுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையைக் கட்டியெடுப்ப வேண்டும் எனும் ஆதங்கத்தோடு, அந்தப் பாடசாலை மாணவர்ளின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், அந்தப் பாடசாலையின் அதிபர் தனது கடமை நேரத்தில் மோசடியாக வேறு நிறுவனத்துக்காகப் பணிபுரிந்து – அதற்காகக் கொடுப்பனவையும் பெற்றுக் கொண்டுள்ளமை தமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



