தலைப்புச் செய்திகள்

மு.கா எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான செய்யட் அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

ஜனாதிபதியை இன்று (16) கொழும்பிலுள்ள அரசியல் அலுவலகத்தில் சந்தித்த அலிசாஹிர் மௌலானா – தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஹாபிஸ் நசீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் உறுப்புரிமையிலிருந்து விலக்கப்பட்டமையை அடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அலிசாஹிர் மௌலானா கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்தப் பின்னணியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவர் – அலிசாஹிர் மௌலானா, ஜனாதிபதி வேட்பாளர் ரணிலை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாபதியை அலிசாஹிர் மௌலானா இன்று சந்தித்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் உடனிருந்தார்.