சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு
– ஏறாவூர் நஸீர் – ISD –
நேபாளத்தில் நடைபெறும் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியில் – ஏறாவூரைச் சேர்ந்த 05 இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏறாவூரைச் சேர்ந்த எம்.எம். முன்சிப், எம்.டி.டிம். ஸகீ, ஐ.எம். தில்ஹாம், எஸ்.எம். பாதிக் மற்றும் ஏ.எம். அத்தீப் ஆகியோரே – சாஃப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள ஏறாவூர் வீரர்களாவர்.
குறித்த அணிக்கு ஏறாவூரைச் சேர்ந்த எம்.எம். முன்ஸிப் தலைமை தாங்குகின்றார். இவர் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எம். முகைதீனின் புதல்வராவார்.
இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் – ஏறாவூரை சேர்ந்த எம்.எம். முஸ்தாக் மற்றும் எம்.எம். .முன்சிப் சகோதர்கள் வாய்ப்பை பெற்றதனை போன்று, இலங்கையின் உதைப்பந்தாட்ட இளையோர் அணியிலும் ஏறாவூரின் ஐந்து இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உதைப்பந்தாட்ட அணியில் மேற்படி ஐந்து இளைஞர்களும் இடம்பெற்றிருந்தமையும், அந்தப் பாடசாலை உதைப்பந்தாட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளமையும் நினைவுகொள்ளத்தக்கது.
நேபாளத்தில் சாஃப் விளையாட்டு விழா – இன்று 16ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறுகிறது.