
ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் தவறு எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் மறுத்துள்ளார்.
விமான நிலையம், துறைமுகம் மற்றும் மைதானத்தை நிர்மாணித்தமை பிரச்சினை அல்ல என்றும், அவற்றை வியாபார முயற்சிகளாக அபிவிருத்தி செய்யத் தவறியதே பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிர்மாணங்கள் வர்த்தக முயற்சியாக அபிவிருத்தி செய்யப்படுமாயின் – நாட்டுக்கு டொலர் வருமானத்தை ஈட்டுவது பெரிய பிரச்சினையாக இருக்காது எனவும் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்ட சூரியவெவ கிரிக்கட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் – நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல கேள்வி எழுப்பிய போதே, சமல் ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
“துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மைதானங்களை மஹிந்த ராஜபக்ஷ நிர்மாணித்த போது, அவருக்கு ஆதரவளித்தவர்கள் – தற்போது இந்தக் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹம்பாந்தோட்ட மாவட்டம் இந்த நிர்மாணங்களை நடத்துவதற்கு பொருத்தமானதல்லவா? முழு நாட்டையும் உள்ளடக்கிய மைதானங்களை அமைக்க அப்போதைய அமைச்சரவை தீர்மானித்தது” எனவும் சமல் குறிப்பிட்டார்.
ஹிங்குராக்கொட, அங்குனகொலபெலஸ்ஸ, புத்தளம் மற்றும் மத்துகம போன்ற பல இடங்களில் – சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டதாகவும், அது இறுதியாக ஹம்பாந்தோட்டயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“ரணில் விக்கிரமசிங்க – குடா ஓயாவில் விமான நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். பிரச்சினை கட்டுமானங்கள் அல்ல. இந்த இடங்களை முறையாக நிர்வகித்து வர்த்தக நிறுவனங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும். 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் – மைத்திரிபால அரசாங்கத்தின் கீழ், இந்த இடங்கள் அழிக்கப்பட்டன. பற்றி யாரும் பேசுவதில்லை. ஒவ்வொரு வாரமும் சுமார் 3,000 முதல் 4,000 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



