மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம்

🕔 February 7, 2016

Maalihaikaadu - 03
–  எம்.ஐ.எம். அஸ்ஹர் –

மாளிகைக்காடு சந்தியினை சுற்றுவட்ட பாதையாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவ்வழியாகப் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு உட்படுத்துவதாக கூறி தண்டப்பணம் செலுத்துவதற்கான சிட்டுகளை வழங்கி வருதாக  பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதியை சுற்றுவட்டப் பாதையாக மாற்றியுள்ளதாக பொலிஸார் எதுவித முன்னறிவித்தலையும் வழங்கவில்லை என்றும், அங்கு சுற்றுவட்டப் பாதை உள்ளமையை தெரிவிக்கும் வகையிலான எதுவித குறியீடுகளும் இடப்படவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், அப்பகுதியினூடாக வழமையாகப் பயணிப்பதைப் போன்று, வாகனங்களைச் செலுத்திச் செல்பவர்களை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தி, சுற்றுவட்டப் பாதையினூடாகப் பயணிக்காமல் வீதி ஒழுங்குகளை மீறியதாகத் தெரிவித்து தண்டப் பணம் செலுத்துவதற்கான சிட்டுகளை வழங்கி வருகின்றனர்.

ஒரு தொலைபேசிக் கம்பத்தினையும், அதன் அருகிலுள்ள தனியார் விளம்பரப் பதாகை அமைக்கப்பட்டுள்ள கம்பத்தினையும் மையமாக வைத்தே, இந்தச் சுற்றுவட்டப் பாதையினை பொலிஸார் ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக, இப்பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்தும், எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறு இருந்தாலும், ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக, அவ்விடயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

இவ்வாறானதொரு சுற்றுவட்டப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதான வீதியிலோ அல்லது குறிப்பிட்ட இடத்திலோ, எந்தவிதமான அடையாளங்களையும் வீதி அபிவிருத்தி அதிகார சபை இதுவரை இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமை, மேற்படி சுற்றுவட்டப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ள விடயத்தினை அறியாத 30க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு, பொலிஸார் தண்டப் பணம் விதித்து சிட்டுகளை வழங்கியிருந்தனர்.

மாளிகைக்காடு சந்தியின் ஒரு பகுதி கல்முனை பொலிஸ் பிரிவுக்கும், மறுபகுதி சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்கும் உட்பட்டபோதிலும், அம்பாறையிலிருந்து வருகை தந்திருந்த விசேட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரே, மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இப்பகுதி வழியாகப் பயணிக்கும் பஸ் வண்டிகள் உட்பட கனரக வாகனங்கள் எவையும் இந்தச் சுற்றுவட்டப் பாதையினை அனுசரித்துப் பயணிப்பதில்லை என்றும், ஆயினும் பொலிஸார் அவற்றினைப் பொருட்படுத்துவதில்லை என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Maalihaikaadu - 02Maalihaikaadu - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்