
அட்டடாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகள், அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் 04ஆவது இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தரம் 11 பிரிவில் – அனீஸ் அலி அப்றோஸ் சஹானி முதலாவது இடத்தினையும், தரம் 08 பிரிவில் ஹனீஸ் ஆய்ஷா அனீகா இரண்டாவது இடத்தினையும் பெற்றுள்ளதோடு, தரம் 06 பிரிவில் றஸுல்தீன் ஆறா அதுன் சாறா 04ஆவது இடத்தினை பெற்றுள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்படி சமூக விஞ்ஞானப் போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இதனையடுத்து வெற்றியீட்டிய மாணவிகளை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சமூக விஞ்ஞான போட்டிகள் – கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்களில், தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையிலான பிரிவுகளுக்கு நடைபெறுகின்றன.
கோட்ட மட்டத்திலிருந்து ஒவ்வொரு மட்டத்திலும் வெற்றி பெறும் மாணவர்கள் – இறுதியில் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.



