சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

🕔 March 24, 2023

க்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.

ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளமையினை மக்கள் அறிவார்கள் எனவும் சபீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“1911 ம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல்கள் அம்பாறை மற்றும் கண்டி – திகனை கலவரங்களாகும்.

அவ்வேளையில் முஸ்லிம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலிருந்தனர். எங்கள் மக்களின் உயிரிழப்பின் ஓலங்கள் ஊடகங்களான உங்கள் காதுகளை துளைத்துக்கொண்டிருந்தது. ஆனால் – பார்வையற்றவர் போலும் காது கேளாதோர் போலும் ஊடகங்களான நீங்கள் செயற்பட்டு, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்த செய்திகளை வெளியிடாமல் தவிர்ந்து கொண்டீர்கள். காரணம் கேட்டபோது, சட்டச் சிக்கலால் அந்தச் செய்திகளை ஒளிபரப்ப முடியாமல்போனது என்று பச்சோந்தித்தனமாக கூறினீர்கள்.

பின்னர், ஏப்ரல் தாக்குதலின் பின்னர் – முஸ்லிம் மக்களின் வீடுகளில் காணப்பட்ட மரம்வெட்டும் கத்திகளைக்கூட, பாரிய ஆயுதங்களாகக் காட்டி செய்திகளை வெளியிட்டு – வஞ்சம் தீர்த்த பாவிகள் நீங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

“எனவே புனிதமான இந்த ரமழான் மாதத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எம்மக்கள் நோற்கும் நோன்பினை, பாவிகளான உங்களின் பணத்தினில் திறப்பதற்கு அனுமத்திக்க முடியாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றும் சக்தி ஊடக குழுமத்தினரை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்