உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

🕔 March 19, 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி சபைகளுக்கான தேர்தல்கள் 2018 பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றன. அந்தத் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எனும் கட்சி – எல்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதற்கு எதிராக அந்தக் கட்சி – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த சபையின் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையினை விதித்தது. இதன் காரணமாக, அந்த சபை தவிர, ஏனைய 340 உள்ளூராட்சி சபைகளுக்கும் – அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடந்தது.

மேற்குறிப்பிட்ட வழக்கில் – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்ததது. அதனையடுத்து 2019 அக்டோபர் 11ஆம் தேதி – எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபையொன்றின் பதவிக் காலம் 4 வருடங்களாகும். அந்த வகையில் 2018 மார்ச் 05ஆம் தேதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானியின்படி, 340 சபைகளின் பதவிக் காலங்களும் 20 மார்ச் 2018 இல் ஆரம்பித்து, 19 மார்ச் 2022இல் நிறைவுக்கு வந்தன.

ஆயினும், உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், 2022 ஜனவரி 10ஆம் தேதியன்று, அப்போதைய அரசாங்க சேவைகள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் – மேற்படி சபைகள் அனைத்தினதும் பதவிக் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டித்து, விசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டார். அதற்கிணங்கவே, இவ்வருடம் மார்ச் 19ஆம் தேதியுடன் இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவுக்கு வருகின்றன.

”உள்ளூராட்சி சபையொன்றின் காலம் நிறைவடைந்த பின்னர், அதன் பதவிக் காலத்தை ஒரு வருடம் அல்லது அதற்கு உட்பட்ட காலத்துக்கு நீட்டிப்பதற்கு – மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் – உள்ளூராட்சி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது” என்கிறார் சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட். இதன் அடிப்படையிலேயே, மேற்படி 340 சபைகளின் பதவிக் காலங்களும் 2023 மார்ச் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டன.

இதற்கிணங்கவே – இன்று நள்ளிரவுடன் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மள்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவுக்கு வருகின்றன.

சபைகள் கலைந்தால் என்ன நடக்கும்

உள்ளூராட்சி சபையொன்று கலையுமாயின் அல்லது அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இல்லாத போது, குறித்த சபையின் அதிகாரம் – அச்சபையின் ஆணையாளர் அல்லது செயலாளர் வசமாகும்.

பிரதேச சபைகள் சட்டம் பிரிவு 09, நகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 27 மற்றும் மாநகர சபை கட்டளைச் சட்டம் பிரிவு 286 (அ) ஆகியவற்றின் கீழ், உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர்கள் அல்லது செயலாளர்களுக்கு மேற்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என வை.எல்.எஸ். ஹமீட் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 09ஆவது பிரிவை இங்கு குறிப்பிட முடியும். ‘தவிசாளரும் துணைத் தவிசாளரும் பதவி வகிக்காத காரணத்தினால், பிரதேச சபையொன்று அதன் பணிகளை நிறைவேற்ற முடியாமலிருக்குமாயின், மேற்படி பதவிகளின் வெற்றிடங்கள் நிலவும் காலப்பகுதிக்கு, தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் ஆகியோரின் அதிகாரங்களை அச்சபையின் செயலாளர் செயற்படுத்த முடியும்’ என அந்தப் பிரிவு கூறுகின்றது.

ஆனால், 2018ஆம் ஆண்டுக்கு முன்னர், உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருந்த அல்லது அச்சபைகளுக்கு தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பதவி வகிக்காத காலப்பகுதியில், அவற்றின் நிர்வாகங்கள் – அவசர கால நிலைமையின் கீழ், விசேட ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன எனவும், சட்ட முதுமாணி ஹமீட் குறிப்பிடுகின்றார்.

குறித்த உள்ளூராட்சி சபைகள் அமையப் பெற்றுள்ள பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் – அப்போது உள்ளூராட்சி சபைகளின் விசேட ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் நடைபெறாவிட்டால் நிலைமை என்னாகும்?

இலங்கையில் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி நடத்தப்படும் மூன்று வகையான உயர் சபைகள் உள்ளன. அவை நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளாகும்.

இவற்றில் மாகாண சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது உள்ளன. சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் நாட்டிலுள்ள மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் முடிவுற்ற போதிலும், இதுவரை அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, மாகாண சபைகளின் அதிகாரங்கள் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள் வசமாகியுள்ளன.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் முடிவுக்கு வந்த பிறகும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடைபெறாமல் போகுமாயின், அவையும் மக்கள் பிரதிநிதிகளற்ற சபைகளாக மாறிவிடும்.

இந்த நிலைமை ஆபத்தானது என்று பரவலாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளிடமிருக்கும் அதிகாரம், தனி நபரொருவரின் கைகளில் நீண்டகாலம் அகப்படுகின்றமை – ஜனநாயக விரோதமானது என்பதோடு, அந்நிலைமையானது அதிகார துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்